Lain-lain

பள்ளி வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல: நமக்கு ஏன் தொழில்முறை சமூகப் பணியாளர்கள் தேவை? (பகுதி 1)

கல்வி முறையைப் பற்றிப் பேசும்போது, மாணவர்களின் கல்விச் சாதனைகள், கற்பித்தலின் தரம், பள்ளி வசதிகள், பண்புநல வளர்ச்சி ஆகியவற்றுக்கே நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆனால், மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்கவும், முழுமையாக வளரவும், பள்ளிப் படிப்பைத் தொடரவும் அவர்களின் சமூகப் பின்னணியும் வாழ்க்கைச் சூழலும் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான வாய்ப்புகளுடனும் வாழ்க்கைச் சூழலுடனும் பள்ளிக்கு வருவதில்லை. சிலர் வறுமை, புறக்கணிப்பு, குடும்பப் பிரச்சினைகள், துன்புறுத்தல், குடும்ப வன்முறை, பகடிவதை, பாகுபாடு போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வகுப்பறைக்குள் வருகின்றனர்.

சில மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர முடியாமல், படிப்பை இடைநிறுத்தும் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வியில் ஆர்வமற்றவர்கள் என்பதால் இது நிகழ்வதில்லை. தங்களால் தனியாகச் சமாளிக்க முடியாத குடும்ப, சமூகப் பிரச்சினைகளே இதற்குக் காரணமாக இருக்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளை முறையாக அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து, தீர்வு காண்பது யாருடைய பொறுப்பு என்பதே இங்கு எழும் முக்கியக் கேள்வியாகும்.

ஆசிரியர்கள் கல்வி அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். மாணவர்களுக்குக் கற்பித்தல், வழிகாட்டுதல், அவர்களின் திறன்களை வளர்த்தல் ஆகியவை அவர்களின் முதன்மைப் பொறுப்புகள்.

வழிகாட்டல், ஆலோசனை ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல், உணர்வுசார் பிரச்சினைகள், தனிநபர் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை வழங்குகின்றனர். பள்ளி நிர்வாகத்தினரும் ஒழுங்கு பொறுப்பிலுள்ள ஆசிரியர்களும் பள்ளி விதிமுறைகளும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுவதை கவனித்துக்கொள்கின்றனர்.

இருப்பினும், பள்ளிகளில் இதுவரை போதிய முக்கியத்துவம் பெறாத ஒரு நிபுணத்துவத் துறை உள்ளது. அது சமூகப் பிரச்சினைகளை முறையாகக் கையாளும் சமூக வழக்கு மேலாண்மைத் துறையாகும்.

*சமூகப் பிரச்சினைகளை ஒழுங்கு நடவடிக்கைகளால் மட்டுமே தீர்க்க முடியாது*

அடிக்கடி பள்ளிக்கு வராத ஒரு மாணவரை எடுத்துக்கொள்வோம். எச்சரிக்கை விடுப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, பெற்றோரை அழைத்துப் பேசுவது, பள்ளி வருகையைக் கண்காணிப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவை அல்ல.

பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் தம்பி, தங்கைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அந்த மாணவருக்கு இருக்கலாம். குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கலாம். பேருந்துக் கட்டணம் அல்லது பள்ளிக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலை இருக்கலாம்.

அல்லது, வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அந்த மாணவருக்குப் பள்ளி மட்டுமே பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்கும் இடமாக இருக்கலாம்.

பகடிவதைச் சம்பவங்களிலும் இதே அணுகுமுறை அவசியம். தவறு செய்த மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்ட மாணவருக்குப் பாதுகாப்பு வழங்குவதும் முக்கியம்.

ஆனால், பிரச்சினையை முழுமையாகக் கையாள, சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பப் பின்னணி, சமூகச் சூழல், சக மாணவர்களுடனான உறவு, அதே சம்பவம் மீண்டும் நிகழும் அபாயம் ஆகியவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்தக் காரணிகளைப் புரிந்துகொள்ளாமல் நடவடிக்கை எடுப்பது, நோயின் உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் வெளிப்புற அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதைப் போன்றது.

இங்குதான் பள்ளிச் சமூகப் பணியாளர்களின் நிபுணத்துவம் அவசியமாகிறது.

*மாணவர் ஆதரவு அமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புதல்*

பள்ளிச் சமூகப் பணியாளர்கள் சமூகத் தேவைகளை மதிப்பீடு செய்தல், வழக்கு மேலாண்மை, குடும்பத் தலையீடு, உரிமைகளுக்காகப் பரிந்து பேசுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள், உதவிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.

பள்ளிச் சூழலில், மாணவர்கள், குடும்பத்தினர், பள்ளி நிர்வாகம், சமூக அமைப்புகள், சமூக நலத்துறை, மலேசிய சுகாதார அமைச்சு, மலேசியக் காவல்துறை போன்ற அரசுத் துறைகளுக்கு இடையே அவர்கள் இணைப்புப் பாலமாகச் செயல்பட முடியும்.

அவர்களின் பணி ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்களின் பொறுப்புகளைப் பறிப்பதல்ல. மாறாக, பிரச்சினையின் சமூகப் பரிமாணத்தைக் கையாள்வதற்கான தனித்துவமான நிபுணத்துவத்தை வழங்குவதாகும். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள மாணவர் ஆதரவு அமைப்பு மேலும் வலுப்பெறும்.

ஒரு மாணவர் படிப்பை இடைநிறுத்தும் அபாயத்தில் இருப்பது தெரியவந்தால், சமூகப் பணியாளர் அவரது குடும்பச் சூழலை மதிப்பீடு செய்வார். சமூகப் பிரச்சினைகளையும் கல்விக்குத் தடையாக இருக்கும் காரணிகளையும் அடையாளம் காண்பார்.

பின்னர், அதற்கேற்ற தலையீட்டுத் திட்டத்தை வகுப்பார். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் இணைந்து, மாணவருக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதையும் உறுதிசெய்வார்.

ஒரு மாணவர் வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது அல்லது புறக்கணிக்கப்படுவது தெரியவந்தால், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும். அந்த விவகாரம் மேல்நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

இத்தகைய அணுகுமுறை, பிரச்சினைகளை அடையாளம் காண்பதோடு நின்றுவிடாது. அவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் கையாள பள்ளிகளுக்கு உதவும்.

இருப்பினும், பள்ளிச் சமூகப் பணியாளர்களை நியமித்தால் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பகடிவதை, கல்வி இடைநிற்றல், துன்புறுத்தல், வறுமை, மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

அவற்றைச் சமாளிக்கப் பல தரப்பினரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தேவை.

பள்ளிச் சமூகப் பணியாளர்களின் நியமனம், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் அல்லது அரசுத் துறைகளின் பொறுப்புகளுக்கு மாற்றாக அமையாது.

மாறாக, சமூகப் பணித்துறையின் தனித்துவமான நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மாணவர் ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் முக்கியமான தொடக்கமாக அமையும்.

பிரச்சினைகளை அடையாளம் காணுதல், தேவைகளை மதிப்பீடு செய்தல், வழக்குகளை நிர்வகித்தல், உரிய நிபுணத்துவமும் அதிகாரமும் கொண்ட அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான முறையான கட்டமைப்பை இது உருவாக்கும்.

இதன் மூலம், மாணவர்களின் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பள்ளிகள் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற முடியும்.

*மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்போம்*

கல்வி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் செயல்முறை அல்ல. பாதுகாப்பான, கண்ணியமான, அனைவரையும் உள்ளடக்கிய சூழலில் வளர்வதற்கான உரிமையும் ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், போதிய பராமரிப்பின்றி வாழும் குழந்தைகள், சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழும் மாணவர்கள் ஆகியோர் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாது.

எனவே, இத்தகைய தடைகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்கான முறைகள் கல்வி அமைப்பில் இருக்க வேண்டும்.

இந்தத் தேவை கல்வி அமைச்சின் தற்போதைய கொள்கை முன்னெடுப்புகளுடனும் ஒத்துப்போகிறது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான மாணவர் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான 2026ஆம் ஆண்டின் தொழில்முறைச் சுற்றறிக்கை எண் 4 (Surat Pekeliling Ikhtisas Bilangan 4 Tahun 2026), பாதுகாப்பான பள்ளி நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான தொழில்முறைச் சுற்றறிக்கை எண் 3 (SPI Bilangan 3 Tahun 2026) ஆகியவை, மாணவர்களின் பாதுகாப்பும் நலனும் கல்வி நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால், சிக்கலான சமூகப் பிரச்சினைகளைக் கையாள பள்ளிகளில் தனிப்பட்ட தொழில்முறைப் பணியாளர்கள் இல்லையெனில், கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் மட்டும் எதிர்பார்த்த பலனைத் தர முடியாது.

*மாணவர் நலனில் செய்யும் முதலீடே நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு*

பள்ளிகளின் பங்களிப்பை நாம் அணுகும் முறையில் மாற்றம் தேவை. பள்ளி என்பது வெறும் கல்வி கற்பிக்கும் நிறுவனம் அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதிசெய்யும் பரந்த சமூக அமைப்பின் ஓர் அங்கமாகும்.

எனவே, மாணவர் ஆதரவு அமைப்பின் புதிய தூணாகப் பள்ளிச் சமூகப் பணியாளர்களை (PSS) நியமிப்பது குறித்து மலேசியக் கல்வி அமைச்சு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

முதற்கட்டமாக, பள்ளிக் குழுமங்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தின் தீவிரம், மாணவர் எண்ணிக்கை, கையாள வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப் பணியாளர்களை நியமிக்கலாம்.

நீண்டகாலத் திட்டமாக, தேவைக்கேற்ப ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு சமூகப் பணியாளரையாவது நியமிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொள்ளலாம்.

அதேவேளை, சமூகப் பணியாளர்களை நியமித்தால் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற தவறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது.

மாணவர்களின் சமூகப் பிரச்சினைகளை ஒரு தொழில்முறையினரோ அல்லது ஓர் அரசுத் துறையோ மட்டும் தனியாகக் கையாள முடியாது. பள்ளி நிர்வாகம், குடும்பம், சமூக அமைப்புகள், பல்வேறு அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம்.

இருப்பினும், கல்வி அமைப்பில் பள்ளிச் சமூகப் பணியாளர்களுக்கெனத் தனிப் பொறுப்பையும் இடத்தையும் உருவாக்குவது முக்கியமான தொடக்கமாகும்.

இதன் மூலம் சமூக வழக்கு மேலாண்மையில் உள்ள நிபுணத்துவ இடைவெளியை நிரப்ப முடியும். உதவிகளைச் சீராக ஒருங்கிணைக்க முடியும். மாணவர்களின் பிரச்சினைகளை முறையாகக் கையாள முடியும். எதிர்காலத்தில் வலுவான மாணவர் ஆதரவு அமைப்பை உருவாக்கவும் இது வழிவகுக்கும்.

குடும்பப் பின்னணி அல்லது பள்ளி அமைந்துள்ள இடம் எதுவாக இருந்தாலும், சமூக உதவி தேவைப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்முறைத் தலையீடும் உரிய ஆதரவும் கிடைக்க வேண்டும். இதுவே நமது இலக்காக இருக்க வேண்டும்.

இறுதியாக, கல்வி அமைப்பின் வெற்றியைத் தேர்வு முடிவுகளைக் கொண்டு மட்டுமே மதிப்பிட முடியாது.

எத்தனை மாணவர்களைத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாத்துள்ளோம்? எத்தனை மாணவர்களைப் படிப்பை இடைநிறுத்துவதிலிருந்து மீட்டுள்ளோம்? வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள எத்தனை பேருக்கு உதவியுள்ளோம்? சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம்? இவற்றையும் நாம் மதிப்பிட வேண்டும்.

சிறந்த பள்ளி என்பது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்குவதோடு நின்றுவிடக் கூடாது. நாம் உரிய முறையில் கையாளத் தவறிய சமூகப் பிரச்சினைகளால் எந்த மாணவரும் கல்வியை இழக்காத வகையில் வலுவான ஆதரவு அமைப்பையும் அது கொண்டிருக்க வேண்டும்.

எழுதியவர்: லோ கெர் சியான் (LOH KER CHEAN)
கெஅடிலான் தேசிய மகளிர் பிரிவின் துணைத் தலைவர்